புதுச்சேரி – ‘பாண்டி’ என்று
பிரபலமாக அழைக்கப்படும் இந்த சிறிய சுற்றுலா நகரத்திற்கு வரும் பலரது
எதிர்பார்ப்புகளில் முக்கியமாக இடம்பிடிப்பது மது, பிரஞ்சு கட்டமைப்பான கட்டிடங்கள் மற்றும்
கலைகள், கடலோர உல்லாச விடுதிகள் போன்ற மேலும் பல. இது போன்ற புத்துணர்வு காரணத்திற்காக மட்டுமே
அறியப்படும் இந்த ஊரில் வசிப்பதால் வேறு ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையோடு
இயைந்த இடங்களை அறியும் ஆர்வத்தோடு தேடுகையில் பாண்டியைச் சுற்றி பல இடங்கள் இயல்பாக
சென்று வரக் கூடிய அளவில் உள்ளதை உணர்ந்தேன். அவ்வாறு பார்த்த சில இடங்கள் உசுட்டேரி,
கழுவேளி, வேல்ராம்பேட் ஏரி, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, கணபதிசெட்டிகுளம்
கடற்கரை, தேங்காய்த்திட்டு அலையாத்தி காடுகள், மற்றும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள
எண்ணற்ற ஏரி, குளங்கள் ஆகியவற்றிற்கு ஒரு பார்வையாளராக மட்டுமல்லாமல் ஒரு ஆர்வலராக,
கற்கும் நோக்கத்தோடு (பள்ளிக்கு செல்லும் மாணவரைப் போல்) சென்றேன். தொடக்கத்தில் பெரிய
எதிர்பார்ப்பு ஏதும் இன்றி சில நேரங்களில் தேடியும் சில சந்தர்ப்பங்கள் தானாக
அமையவும் இந்த இடங்களுக்குச் சென்றேன். ஆனால் நம்மைச் சுற்றி வாழும் பல உயிரினங்களையும் சுற்றி நடக்கும் பல உயிரோட்டமுள்ள நடவுகளையும் காண மீண்டும்
மீண்டும் செல்ல தூண்டுவது இந்த இயற்கை அமைத்த இடங்களுக்கே உள்ள ஒரு தனி தன்மை.
இந்த வசீகர தன்மை ஒரு செயற்கையாக கண்டமைக்கப்பட்ட இடத்திற்கு ஏனோ
இருப்பதில்லை...!! இவ்வாறு பலமுறை வர தூண்டும் இடங்களுள் ஒன்று சின்ன
வீராம்பட்டினம் கடற்கரை.
மணற்பாங்கான கடற்கரை....!!
புதுச்சேரி கடற்கரையின் தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமையபெற்ற ஒரு நெய்தல் (மணலும், மணல் சார்ந்த பகுதி) பண்புடைய சிறிய கடற்கரை. இன்று கடலை ஒட்டியுள்ள பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள பெருங்கற்களால் பாதுகாக்கப்படுகிற (என்று நம்பப்படும்..!) கடற்கரைகளை ‘நெய்தல்’ என்று கூற முடியுமா? இக்கடற்கரைகள் கற்களும் கற்கள் சார்ந்த பகுதியாக மாறி வருகிறது. கடற்கரைகளில் மணல் இல்லாததால் என்ன? கடலுக்கு உரிய அழகு நாம் அமர்ந்து ரசிக்கவும் கவர்ந்து இழுக்கவும் ஒன்றும் குறை இல்லையே! ஆனால் இவ்வாறான கற்களும் கற்கள் சார்ந்த கடற்கரைகளால் நாம் இழப்பது என்ன? பார்ப்போம்....
இந்த அழகான சின்ன வீராம்பட்டினம் கடற்கரை என்பது
செஞ்சி (அல்லது சங்கராபரணி அல்லது சுண்ணாம்பாற்றின்) ஆற்றின் முகத்துவாரத்தின்
வடக்கே அமைந்துள்ளது. அநேகமான முகத்துவாரப் பகுதிகளின் அமைப்பில் ஆற்றில் நீரோட்டம் உள்ள நாட்களில் ஆற்றில் இருந்து நன்னீர் கடலில் வடியும், நீரோட்டம்
குறைவாக உள்ள நாட்களில் கடல் நீர் ஆற்றுக்குள் உட்புகும். இவ்வாறு இங்குள்ள நீர்
கடலின் உப்புநீரும் ஆற்றின் நன்னீரும் கலந்துள்ளதால் சூழலமைப்பில் முக்கிய
பங்குள்ளது. இயற்கையாக முகத்துவாரப்பகுதி பல்லுயிர் அமைவிடமாகவும், வெள்ளம் மற்றும் கடற்சீற்ற கட்டுப்பாட்டு அமைப்பாகவும் அமைக்கப்பெற்றுள்ளது. (அப்படிப்பட்ட ஒரு அழகிய சற்றே பெரிய முகத்துவாரப் பகுதி தான் பிச்சாவரம் சதுப்பு நிலப்பகுதி)
கடற்கரை மணலில் இருந்து மேற்கு நோக்கி |
சின்ன வீராம்பட்டினம் கடற்கரையின் தொடர்ச்சியாக வடக்கே
வீராம்பட்டினம் கடற்கரை உள்ளது. இங்குள்ள என்னற்ற சிறு குறு மீனவர்கள் அவர்களின்
படகுகளை கரையில் சுலபமாக ஏற்றவும் இறக்கவும், வலைகளை காய வைக்கவும் கடற்கரை மணல் பகுதிகளைப்
பயன்படுத்துகின்றனர்.
மணலில் குப்பைகளின் நடுவே காக்கை |
அடுத்து நம் கண்ணில் படாதவாறு ஓடி
ஒழியப் பார்க்கும் மணல் நண்டுகள் (Ghost crab). இவைப் கிட்டத்தட்ட மணலின்
நிறத்தினில் இருப்பதாலும் வேகமாக நகர்வதாலும் அருகில் சென்று சிறிது நேரம் அசையாமல்
நின்றால் அதன் அசைவுகள், குணாதிசியங்கள், அறிய செயல்பாடுகளைக் காண வாய்ப்பு கிடைக்கும்.
இவை மணலில் பொந்துகள் அமைத்து மற்ற சிறிய உயிரினங்களையும் அவற்றின் முட்டைகளையும்
உண்டு வாழும். இவற்றின் இருப்பு ஒரு
கடற்கரையின் உயிர் தன்மையைக் காட்டுவதாகவும் அறியப்படுகிறது. இவை தங்களுக்கான
பொந்துகளை கட்டமைக்கும் அழகைக் காண அமைதியாக சிறிது நேரம் ஒதுக்கலாம். இவற்றை விட காண்பதற்கு
சிறிது அரிதான மற்றொரு பக்கவாட்டு திசையில் ஊர்வனவை சிவப்பு நண்டுகள். இவை
எந்த நடமாட்டமும் இல்லையென்று உறுதிபடுத்திக்கொண்டப் பின்பே வெளியில் வருகின்றன. இந்த சிவப்பு நண்டுகள் நமது கடற்கரைகளில் இருந்து மெல்ல மெல்ல காணாமல் போகின்றன. மேலும் நத்தைகள், சன்னியாசி நண்டு ஆகியவற்றை கடற்கரையின் அருகிலுள்ள ஆற்றில் காணலாம்.
மணல் நண்டு |
சிவப்பு நண்டு |
அடுத்து இது போல இந்தியாவின் கிழக்கிலுள்ள கோரமாண்டல்
கடற்கரைக்கு பருவத்திற்கு பருவம் முக்கியமான காரணத்தோடு வருகைத் தரும் ஒரு விருந்தாளி.
சிற்றாமை என்றழைக்கப்படும் ஒரு கடலாமை, ஆங்கிலத்தில் Olive Ridley
turtle. ஆண்டுதோறும் குளிர் மற்றும் முன்பனி காலங்களில் வந்து கடற்கரை
மணலில் குழி தோண்டி ஒவ்வொரு ஆமையும் இருநூறு முதல் முந்நூறு முட்டைகள் இட்டு அக்குழியை
மூடிவிட்டு சென்று விடும். அவற்றுள் சில முட்டைகளில் குஞ்சு பொறிந்து மணலில்
ஊர்ந்து கடலை அடைந்து பின்பு நீந்தி செல்கின்றன. இவற்றின் அறிய ஞானத்தால் இனபெருக்க நிலைக்கு வளர்ந்து மீண்டும் இதே கடற்கரைகளுக்கு வந்து முட்டையிடும். இவை இரவு நேரத்திலும்
அதிகாலை நேரத்திலும் முட்டியிடுவதால் நாம் அரிதில் காணமுடியாது. ஆனால் சின்னவீராம்பட்டினத்தில்
இன்று இவற்றை வேறு ஒரு நிலையில் காணலாம், இறந்த நிலையில்.
இறந்த நிலையில் சிற்றாமை |
இவை
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் பட்டியலின் படி 'அழியவாய்ப்புள்ளதாக' அறியப்படுகிறது.
ஆனால் இவற்றின் அழிவு நம் கண்முன்னே நடக்கிறது. இவற்றின் காரணமில்லா அழிவிற்கு
காரணம் படகுகள் கப்பல்களின் இழுவை விசிறிகளில் அடிப்படுவது, வலைகளில் மாட்டி
மூச்சு திணறுவது, நெகிழியை உணவென்று நினைத்து அதிமாக உட்கொள்ளுவது, போன்றவை. ஆனால்
மிக முக்கியமான காரணம் கடற்கரை மணலின் ஆக்கிரமிப்பால். ஒரு ஆமை இருநூறு முட்டைகள்
இட்டாலும் ஆயிரத்தில் ஒன்று தான் இனபெருக்கம் செய்யும் அளவுக்கு வளரும். எனவே ஒவ்வொரு
ஆமையும் அதன் முட்டைகளும் அரிதானவை.
இவற்றோடு அங்கும் இங்கும் பறந்து வட்டம் அடிக்கும்
ஆலா, மணலில் உள்ள சிறிய பூச்சி மற்றும் புழுக்களைக் கொத்தி தின்னும் உப்புகொத்தி,
இவை அனைத்தையும் அச்சுறுத்தும் பருந்து என்று அனைத்தும் இந்த கடல் மணலை
சார்ந்துள்ளன. மேலும் கடற்கரை மணலில் வளரும் அடம்பு (அடம்பங்கொடி) ஒரு முக்கியத்துவம்
வாய்ந்தவை. இவை அடர்ந்து வளர்ந்த பகுதிகளில் பூச்சிகள், பூச்சிகளைத் தேடி பறவைகள்,
பறவைகளின் எச்சங்களில் மீண்டும் ஊட்டசத்து பெற்று வளரும் அடம்பு என்று அனைத்தும்
ஒன்றுடன் ஒன்று சார்த்துள்ளது.
மணலில் அடம்பங்கொடி (பின்னணியில் அனுகுசாலை) |
மணலில் குப்பைகளின் நடுவே இறைத்தேடும் உப்புக்கொத்திகள் |
இவ்வாறு பல்லுயிர் வாழிடமாக உள்ள கடற்கரையையும் அதன் மணலையும் அதன் தன்மை மாறாமல் காக்கும் கடமை நமக்குள்ளது. ஆனால் நாம் புதுப்பித்தல் என்ற பெயரில் தன்மைப் பொருந்தா கட்டமைப்பை உருவாக்குவது, குப்பைப் போடுவது, படகு சவாரி, அயல் தாவரங்கள் நடுவது, போன்றவற்றால் அதன் தன்மையை விரைவாகவோ, படிப்படியாகவோ மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
மணல் இல்லாத அல்லது மாற்றியமைக்கப்பட்ட கடற்கரைகளில்
இந்த உயிரினங்கள் தங்கள் இயல்பில் இருந்து விலகி தகவமைத்து வாழ்ந்தாலும் நீடித்து செழித்து
பல்லுயிர் சூழலாக நிலைத்திருக்க இயலாது.
இயற்கையான மணற்பாங்கான கடற்கரை என்பது பல கோடி
வருடங்களாக காற்றாலும், நீராலும் உருவாக்கப்பட்டவை. கடலும் கடற்கரைகளும் காடுகள்
போலவும், மலைத்தொடர்கள் போலவும் நாம்
வாழும் இந்த வாழத்தகுந்த சூழ்நிலையை நிர்மானிக்கும் இன்றியமையாத இயற்கைக் கட்டமைப்பு.
நாம் அறிந்ததும் அறியாததுமாக பல கோடி உயிரினங்கள் இந்த கடற்கரையைச் சார்ந்து வாழ்கின்றன. இவ்வாறே பல ஆயிரம் வருடமாக மனிதர்கள் உட்பட உயிரினங்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ
ஒன்றோடொன்று சார்ந்து வாழ்ந்து வந்துள்ளன. அவற்றை அழித்தோ அல்லது மாற்றியமைத்தோ
அல்லது திருத்தியோ நாம் கட்டமைத்தால் அதற்கான எதிர்வினையை நாம் அனுபவிக்க
நேரிடும். இதற்கு நம் கண்முன் உள்ள சான்று பல்லுயிர் தன்மை குன்றிய மணலற்ற புதுச்சேரி கடற்கரை (மேலும்
சான்றுகள் சென்னையின் வடக்கே உள்ள கடற்கரைப் பகுதிகள்). நாம் செய்த தவறுகளில்
இருந்து கற்று திட்டமிட்ட நிலையான இயற்கையுடன் இயைந்த வளர்ச்சியை நோக்கி செல்வோம்.
கடற்கரைகள் நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுபவையாக
மட்டுமன்று, பல கோடி ஆண்டுகள் தொடந்து வந்தது போல பல்லுயிர் பெருக்கத்தின் கருவறையாக நிலைக்கட்டும்.
படங்கள்:
கௌதமா, சௌந்தர்
Very nice!! Almost felt like a video documentary!!
ReplyDelete, அழகான கதை தொகுப்பு
Deleteவாழ்த்துக்கள் அண்ணா
அழகாக வரையப்பட்ட ஓர் உயிரோட்டமுல்ல தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதோழற்க்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஆழ்ந்து,மிகவும் கவனிப்புடன் தகவலை பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது
ReplyDeleteநன்றி
ReplyDeleteCongratulations , super 🤗🤗
ReplyDeleteதம்பியாகவும், பொறியாளராகவும் பார்த்த வசந்தத்தை, இயற்கை ஆர்வலராகவும், சூழ்நிலையியல் அறிவியல் ஆய்வாளர் மற்றும் இளம் கட்டுரையாளர் என்ற வித்தியாசமான கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறது இக்கட்டுரை.
ReplyDeleteவாழ்த்துக்கள் வசந்த்.
அருமையான பதிவு Soundhar and Gowthama கட்டுரைக்கு ஏற்ற நேர்த்தியான புகைப்படங்கள், looking forward for many more articles, Great going👍
ReplyDeleteஅனைவருக்கும் எங்களது நெஞ்சான்ற நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இயற்கையோடு.
ReplyDeleteபடித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இங்கு பகிரப்படும் பதிவுகளைப் படித்து மற்றவர்களுக்கும் பகிரவும். மேலும் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பகிரவும்.
ReplyDeleteVery nice Sound bar...... we all should stay together to preserve nature..
ReplyDeleteThanks and yes we should join hands act by individual actions now.
Deleteஉங்கள் பதிவு இயற்கையை ரசிக்க வைத்தது அருமை!வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநன்றி. தொடர்ந்து இங்கு வரும் பதிவுகளைப் படித்து தங்களது கருத்துகளைப் பகிரவும்.
DeleteSo interesting. And giving different perspective to look the environment and habitat around us in closer lens. 👌🏻👌🏻
ReplyDelete